வடமேற்கு டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுவன் திடீரென காணாமல் போனான்.
சிறுவனை அப்பகுதி முழுவதும் தேடிய பெற்றோர், கிடைக்காததால் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது சிறுவனை, திறந்து கிடந்த கால்வாய் அருகே பார்த்ததாக ஒருவர் கூறியுள்ளார்.
இதனால் சிறுவன் கால்வாயில் விழுந்திருக்கலாம் என சந்தேகித்த போலீசார், கால்வாயில் இறங்கி தேடினர்.
அப்போது கால்வாயில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். மகனை இழந்த பெற்றோர், கதறி அழுதனர்.
கால்வாய் திறந்து கிடந்ததாலேயே தங்கள் மகன் அதில் விழுந்துள்ளான் என்றும், மகனின் மரணத்திற்கு நகராட்சி அதிகாரிகளே காரணம் எனவும் பெற்றோர் குற்றம் சாட்டினர்.
சிறுவனை யாரேனும் கால்வாயில் தள்ளிவிட்டாரா அல்லது சிறுவனே தவறி விழுந்தானா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.