நகைச்சுவை நடிகர் தங்கவேலு
நகைச்சுவை நடிகர் தங்கவேலு சிரிக்க மாட்டார் ஆனால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். அப்படியொரு நடிகர் அவர்.
அவர் நடித்த கல்யாணப்பரிசு, திருடாதே, கைதி கண்ணாயிரம் போன்ற படங்களில் இவர் நடித்த காட்சிகளைப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிக்கலாம்.
எம்ஜிஆர், சிவாஜி படங்களில் தங்கவேலுவின் காமெடி என்றால் சக்கை போடு போடும். அவர் நடிக்காத காமெடியா என்று கேட்பார்களாம் ரசிகர்கள்.
கலைவாணர் என்எஸ்கே. தான் இவருடைய குரு. நாடகத்துறையிலும் அவர் பங்கு அளப்பரியது. இவரது நகைச்சுவையில் யதார்த்தமே அதிகம் இருக்கும்.
காரைக்காலில் 1917ம் ஆண்டு அருணாசல ஆசாரி, தருமம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் தங்கவேலு. தந்தையோ மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். தங்கவேலு மொத்தமே 15 நாள்கள் தான் பள்ளிக்கூடமே போயிருக்கிறார்.
6வது வயதில் அன்னையை இழந்தார். அருணாசல ஆசாரி மறுமணம் செய்தார். சித்தியோ கொடுமைக்காரி. இதை உணர்ந்து கொண்ட பாட்டி பேரன்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
பாட்டி வீட்டில் மிகுந்த கஷ்டத்தில் வளர்ந்து வந்தார் தங்கவேலு. பாட்டுகள் என்றால் கொள்ளைப் பிரியம். எங்காவது திருவிழா நடக்கும்போது கச்சேரி, நாடகம், நடனம் என்றால் முதல் வரிசையில் போய் உட்கார்ந்து கொள்வார்.
தங்கவேலுவிடம் அவரது தந்தை என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்டார். நடிகனாக விருப்பம் என்றார். உடனே தன் மகன் கூத்தாடியாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் சகோதரிகளின் பிள்ளைகளிடம் தங்க வேலை செய்ய அனுப்பி வைத்தார்.
சித்தியின் கொடுமையிலிருந்து தப்பித்தால் போதுமப்பா என்ற தங்கவேலு சந்தோஷத்தில் அங்கு சென்றார். ஆனால் அது இதை விட மோசமான இடமாக இருந்தது. அங்கு கடையை க்ளீன் செய்வது, மாட்டைக் குளிப்பாட்டுவது, மேய்ப்பது, துணிகளை துவைப்பது, மாட்டுக்குத் தீனி வைப்பது என்று தான் இவருக்கு வேலை. தயிர் பழைய சோறு தான் சாப்பாடு.
அவ்வாறு பல துன்பங்களுக்கு பின்னர் சென்னை வந்து சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டவர் தான் நகைச்சுவை ஜாம்பவான் தங்கவேலு.