பிரபல இயக்குநரின் 100 நாள் ஓடிய முதல் திரைப்படம் எது தெரியுமா?

அன்னை இல்லம்

அன்னை இல்லம்

பழம்பெரும் இயக்குனர் பி.மாதவன் ஆந்திராவைச் சேர்ந்தவர். முழுப்பெயர் பாலகிருஷ்ணன் மாதவன் நாயுடு. பல படங்கள் அவருடன் பயணித்த பிறகு மணி ஓசை படத்தை 1963 இல் இயக்கினார்.

மணி ஓசையை கண்ணதாசனின் அண்ணன் ஏ.எஸ்.சீனிவாசன் தயாரித்தார். கல்யாண்குமார் நடித்த அப்படம் சுமாராகப் போனது. மணி ஓசை சுமாராகப் போனாலும் தனது நண்பர் எம்.ஆர்.சந்தானம் தயாரித்த படத்துக்கு பி.மாதவனை சிபாரிசு செய்தார் சிவாஜி கணேசன். அப்படம் அன்னை இல்லம் என சிவாஜி வீட்டுப் பெயரிலேயே தயாரானது.

ஒரு பெரிய குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவும், இணைவும்தான் அன்னை இல்லம் படத்தின் கதை. சிவாஜி கணேசன் – தேவிகா காதல் காட்சியை பி.மாதவன் சுவைபட எடுத்திருந்தார்.

அப்பா எஸ்.வி.ரங்காராவ் கடத்தல்காரர் எனத் தெரியும் போது சிவாஜி கொள்ளும் துயரம் ரசிகர்களையும் தாக்கியது. நாகேஷ், முத்துராமன், எம்.வி.ராஜம்மா, நம்பியார் என பலரும் நடித்திருந்தனர்.

நம்பியார் வழக்கம்போல் வில்லன். சிவப்பு விளக்கு தெரியுதம்மா பாடலை சென்னை எல்ஐசி பில்டிங்கில் படமாக்கியிருந்தனர்.

கன்னடத்தில் தாதா மிராசி எழுதிய கதைக்கு ஜி.பாலசுப்பிரமணியம் திரைக்கதை எழுத, ஆரூர் தாஸ் வசனம் எழுதினார். உணர்ச்சிமிகுந்த கட்டங்களை அவரது வசனம் மேலும் உணர்ச்சிமிகுந்ததாக ஆக்கியது. படத்தில் சிவாஜியின் நடிப்பும், எஸ்.வி.ரங்காராவின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டன.

படத்தின் மிகப்பெரிய பலமாக கே.வி.மகாதேவினின் பாடல்கள் அமைந்தன. எண்ணிரண்டு பதினாறு வயது…, மடி மீது தலைவைத்து விடியும்வரை…, நடையா இது நடையா… ஆகிய பாடல்கள் கண்ணதாசன் வரிகளில் தமிழகமெங்கும் ஒலித்தன.

முதல் படம் சுமாராகப் போனாலும் இரண்டாவது படமான அன்னை இல்லம் பல சென்டர்களில் 100 நாள்கள் ஓடி பி.மாதவனின் திறமையை உலகறியச் செய்தது.

அன்னை இல்லம் வெற்றியைத் தொடர்ந்து எம்ஜிஆரின் தெய்வத்தாய் படத்தை மாதவன் இயக்கினார். இயக்குனரின் வேலையில் எம்ஜிஆர் தலையிட படப்பிடிப்பு தடைபட்டது.

எம்ஜிஆர் இனி இயக்குனரின் வேலையில் தலையிட மாட்டார் என தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் உறுதி அளித்த பிறகே மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினார் மாதவன்.

இந்த கசப்புக்குப் பிறகு எம்ஜிஆரை வைத்து அவர் வேறு படங்கள் இயக்கவில்லை. அதே நேரம் சிவாஜியை வைத்து தொடர்ச்சியாக படங்கள் இயக்கினார். வியட்நாம் வீடு, பட்டிக்காடா பட்டணமா, ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம் போன்றவை அதில் சில.

அன்னை இல்லம் 1963, நவம்பர் 15 தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இதனுடன் எம்ஜிஆரின் பரிசு திரைப்படம் மோதியது. இந்த ரேஸில் அன்னை இல்லம் எளிதாக வெற்றி பெற்றது.

பி.மாதவனின் முதல் வெற்றிப்படமான அன்னை இல்லம் வெளியாகி தற்போது 59 வருடங்கள் நிறைவடைந்தது.