Maattukara Velan: 1970 ஜன 14 தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு வெளிவந்த வெள்ளிவிழா படம்தான் “மாட்டுக்கார வேலன்” மக்கள் திலகத்தின் 7 வது வெள்ளிவிழா படமாக அமைந்தது.
ஜெயந்தி பிலிம்ஸின் தயாரிப்பில் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட படம். ஆரம்பம் முதல் இடைவேளை வரை நேரம் போவதே தெரியாது. வசனம் A.L. நாராயணன். நகைச்சுவை வசனத்தை மக்கள் திலகம் அப்பாவியாக பேசும் போது தியேட்டரில் எழுந்த ஆரவாரம் அடங்க நெடுநேரம் ஆகியது.
பாடல்கள் அதிலும் ‘சத்தியம் நீயே தர்மத்தாயே’ என்ற டைட்டில் பாடலில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. இசை கேவி.மகாதேவன். அத்தனை பாடல்களும் அருமையாக படமாக்கப்பட்டிருக்கும். மிகவும் எளிமையாக வைகை அணையில் படமாக்கப் பட்டிருக்கும்.
‘பூ வைத்த பூவைக்கு’ பாடலுக்கு இரண்டு ஜோடிகள் ஆடுவது கனவுலகுக்கு சென்று வந்தது போலிருந்தது. அதிலும் ‘தொட்டுக்கொள்ள வா’ பாடல் வைகை அணையின் அழகை இரவில் பார்க்க மிகவும் அருமை.
சண்டை காட்சிகள் புதுமையாக படமாக்கப்பட்டிருக்கும். அதிலும் கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் வாத்தியார் கம்பியை தூக்கி சுத்த ஆரம்பிக்கும் போது எழுந்த ஆரவாரம் அடங்க நெடுநேரம் ஆனது.
‘ஈடில்லை இணையில்லை என்று புகழாத வாயில்லை’ என்ற விளம்பரம் “மாட்டுக்கார வேலனு”க்காக பத்திரிகைகளில் பயன் படுத்தப் பட்ட வாசகம். அது உண்மையும் கூட. வெற்றி பெரும் என்று நினைத்த படம் அசுர வெற்றி பெற்று ஓடியது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.