நடிகர் சரத் பாபு உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன.
கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரத்பாபு நேற்று உயிரிழந்தார்.
72 வயதான நடிகர் சரத்பாபு கிட்டத்தட்ட 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்தவர் சரத்பாபு.
ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார்.
குறிப்பாக ரஜினிகாந்த்துடன் இவர் நடித்த முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து படங்களின் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சரத்பாபு இறுதிச் சடங்கு சென்னை தி.நகரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தகவல் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.